Saturday, October 24, 2009

கவிஞர் சல்மாவின் நேர்காணல்

இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறீர்கள்.மறுபடியும் ஒரு புதிய கவிதையை எழுதும் உத்வேகத்தை எது தருகிறது. இதில் கிடைக்கிற பணமா? புகழா? அந்தஸ்த்தா?

(சிரிக்கிறார்) கவிதை எழுதுகிறவர்களுக்கு பெரிதாக யாரும் பணம் தருவதில்லை. கவிதைக்கென்று அவர்கள் தரும் பணம் கவிதை எழுதும் எண்ணத்தை அல்ல, எந்த எண்ணத்தையுமே உண்டாக்காது. புகழுக்காகவும் அந்தஸ்த்துக்காகவும் நான் எழுதுவதில்லை..சில விஷயங்களின் மேல் எனக்கு கோபம் இருக்கிறது, சில விஷபயங்களின் மேல் வருத்தம் இருக்கிறது. எனக்கென்று சில தோல்விகளும் ஆற்றாமைகளும் இருக்கின்றன. இவற்றை கவிதையாக எழுதா விட்டால் நான் நிம்மதி இழக்கிறேன். இந்த நிம்மதி இன்மையே என்னை கவிதை எழுத வைக்கிறது.


உங்கள் கவிதைகளில் வீட்டைப் பற்றிய கசப்பான எண்ணங்கள் நிறைய பதிவு செய்யப் படுகின்றன. பயணத்தில் இருந்து வீட்டிற்கு உங்களை கொண்டு வந்து சேர்க்கும் சக்தியை துர்தேவதைகள் என வர்ணிக்கிறீர்கள். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வீடு கசப்பானதாக இருக்கிறதா? இல்லை பொதுவாகவே பெண்களுக்கு வீடு கசப்பானதாக இருக்கிறதா?

நான் எனக்கான உணர்வுகளை மட்டும் எழுதுவதில்லை. எனக்கான உணர்வு சக பெண்களுக்குமான உணர்வாக இருக்கும் போது மட்டுமே அதை பதிவு செய்கிறேன். வீடு என்று நான் சொல்வது குடும்பத்தை. குடும்பம் பெண்களுக்கு ஒரு தண்டனைக் கூடம்தான். குடும்பம் ஒரு பெண்ணை சிதைக்கவே செய்கிறது. குடும்பத்தில் ஒரு பெண் இழப்பதே அதிகம்.குடும்ப அமைப்பில் லாபம் அடையும் ஆண்களே அதை அதிகம் சிலாகிப்பார்கள். பெண் சிலாகிக்க எதுவுமில்லை.பெண் குடும்பத்தில் தன் சுதந்திரத்தை சுயத்தை இழக்கிறாள் என்பதே உண்மை.

நீங்கள் முற்போக்கான பெண்ணாக அறியப்பட்டவர். ஆனால் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் குரானின் மேன்மைகளைப் பற்றி பேசுகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பெண். நான் என் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் என சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என் சமூக மக்கள் தலித் மக்களைக் காட்டிலும் பல விஷயங்களில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். துரதிர்ஷ்ட வசமாக அவர்கள் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். அரசாங்கம் சொன்னால் கேட்க மாட்டார்கள். படித்தவர்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள். பெரியவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள். ஆனால் குரான் சொல்கிறது என்று சொன்னால் உடனடியாகக் கேட்பார்கள். அந்த மக்கள் மேம்பட வேண்டியிருக்கிறது.அதற்காகவே அந்த நிகழ்ச்சி . அதற்கு வேறெதுவும் காரணம் கிடையாது.

" ஈழ மக்களுக்கு இலக்கியவாதிகள் ஒன்றுமே செய்ய வில்லை " என்கிறாரே தமிழ்நதி?

என்னை அப்படி சொல்ல முடியாது. ஈழத்தமிழருக்கான போராட்டத்திற்காக என்னை நோக்கி என்ன வெல்லாம் கேட்கப்பட்டதோ அதை எல்லாம் நான் கொடுத்திருக்கிறேன். நிதி கொடுத்திருக்கிறேன். என் படைப்புகளை கொடுத்திருக்கிறேன். என் பங்களிப்பை கொடுத்திருக்கிறேன். ஈழப்போராட்டத்திற்காக நான் சார்ந்திருக்கிற கட்சி என்னென்ன இயக்கங்களை மேற்கொண்டதே அத்தனையிலும் பங்கெடுத்திருக்கிறேன்.

ஈழப்போராட்டத்தின் மீதான எனது அன்பும் பங்கெடுப்பும் இன்று நேற்றானது அல்ல. நான் பதினைந்து வயது பெண்ணாக இருக்கும் போதிலிருந்தே அது தொடங்கி விட்டது. அந்த சமயத்தில் தான் குட்டிமணியையும் ஜெகனையும் சிங்கள அரசு கொலை செய்திருந்தது. அவர்களின் கண்ணைத் தோண்டி அவர்களின் இன்னொரு கண் முன்னேயே பூட்ஸ் காலால் நசுக்கியிருந்தது. அந்த செய்தியை ராணி பத்திரிக்கையில் படித்தேன். அன்றைய நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். அப்பொழுதே அவர்களுக்காக பணம் கொடுத்திருக்கேன். நான் சேர்த்து வைத்திருந்த முந்நூறு ரூபாய் ஐநூறு ரூபாய் பணத்தையெல்லாம் அவர்களின் போராட்டத்திற்கு மணியார்டர் செய்திருக்கிறேன்.

இந்த மே 17க்கு முன்பாக படைப்பாளிகளின் சார்பாக ஒரு கண்டணக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தேன். அங்கு வாசிக்க ஒரு கவிதையும் எழுதி வைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதை ஏற்பாடு செய்திருந்த தோழியிடம் அந்தக் கவிதையை அனுப்பி வைக்கிறேன், அந்தக் கூட்டத்தில் வாசியுங்கள் என்று கேட்டேன். அவர் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். அதனாலேயே என் பதிவு அங்கு இல்லாமல் போய் விட்டது. அதை உங்களிடம் தருகிறேன் ..வாய்ப்பிருந்தால் அதை உங்கள் தளத்தில் பிரசுரியுங்கள்.

இங்கே நம்மவர்களிடம் இருக்கிற பிரச்சினை இதுதான்.
இவர்கள் ஏதாவது ஒரு பெயரில் ஒரு அமைப்பைத் துவங்குகிறார்கள்.அதனடிப்படையில் ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். நீ உள்ளே வரலாம் நீ வரக்கூடாது என்று சட்டம் போடத்துவங்குகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் UK சென்றிருந்தேன். அங்கே பல கண்டன கூட்டங்களும் போராட்டங்களும் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இரண்டு மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் அமர்ந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் இரண்டு நாட்கள் அமர்ந்திருந்தேன்.

இப்போது என்ன பேசி என்ன செய்ய? எதுவுமே செய்ய முடியாமல் நின்று விட்டோம். சில லட்சம் தமிழர்களை சாகக் கொடுத்து விட்டோம்.

அங்கு நடந்த கோரப் படுகொலைக் காட்சிகளை என்னால் பார்க்க முடிவதில்லை. அதனாலேயே அவைகள் இடம் பெற்றிருக்கும் இணைய தளங்களை கூட நான் பார்ப்பதில்லை. சமீபத்தில் ஒரு நண்பர் மிகவும் சொல்லி புகழி இணையதளத்தை ஒரு விஷயத்திற்காக பார்த்தேன். அதில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இறந்து கிடந்த படம் இருந்தது. வாய் விட்டு அழுதேன்.(இதை சொல்லும் போது அழுது விடுகிறார்)

அந்தக் குழந்தையை தலையில் அடித்து கொன்றிருக்கிறார்கள். இறந்த உடலின் மீது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.

யாருடையக் குழந்தையும் தெய்வமே. எல்லாக் குழந்தைகளும் கொண்டாடப் பட வேண்டியவர்களே.

குழந்தைகளைக் கூட உயிரோடு விட்டு வைக்க முடியாத படி இனவெறியோடு சிங்கள அரசு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் சர்வதேசம் ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லை பயன்படுத்தி ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்தச் சொல்லி ஒரு கொட்டும் மழையில் மனிதச் சங்கிலியாகக் கை கோர்த்து நின்ற தினம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.அது ஒரு மாபெரும் எழுச்சியாக மாறி அந்த மக்களைக் காப்பாற்றி விடும் என்று தீவிரமாக நம்பினேன்.

ஈழத்தில் நடந்தவைகள் தீராத வலியாகவே இன்னும் நெஞ்சில் இருக்கிறது.

நம் சமூகத்தில் கவிஞர்களுக்கு இருக்கும் இடமும் அந்தஸ்த்தும் உங்களுக்கு திருப்தியானது தானா?

தனிப்பட்ட முறையில் எழுத்தின் மூலம் எனக்கு நல்ல அந்தஸ்த்தே உண்டாகி இருக்கிறது. எனக்கு நடந்த பல நல்ல விஷயங்களுக்கு காரணமாக என் எழுத்து இருப்பதை நான் உணர்கிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாக கவிஞர்களுக்கு இது நல்ல அந்தஸ்த்தைக் கொடுத்திருக்கிறது என்று சொல்ல மாட்டேன். நாம் கவிஞர்களையும் கவிதைகளையும் கொண்டாடாத ஒரு சமூகமே.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி உங்கள் கருத்து?

தற்சமயம் அவரைப் பற்றி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல கருத்துக்கள் சொல்லப் பட்டு வருகின்றன. ஆனால் நாம் யாருக்கும் எதுவும் தெரியாது என்பதே உண்மை. சார்பான அல்லது எதிரான ஒரு புத்தகத்தைப் படித்திருக்கிறோம் அல்லது படிக்காமல் கருத்து சொல்கிறோம் . பிரபாகரனைப் பற்றி ஈழத்தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியமானது.

உங்கள் பிள்ளைகள் ஒரு கவிதை எழுதும் அம்மாவை எப்படிப் பார்க்கிறார்கள்?

அவர்களுக்கு என் எழுத்து பற்றியெல்லாம் பெரிதாகத் தெரியாது. நான் பிரபலமாக இருப்பது அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவர்களுடைய நண்பர்கள் ,வகுப்புத் தோழர்கள் அவர்களிடம் உங்கள் அம்மாவை டிவியில் பார்த்தேன் , உங்கள் அம்மாவின் புகைப்படத்தை பத்திரிக்கையில் பார்த்தேன் என்று சொல்வது அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.

கவிஞர் சல்மா எழுதி படைப்பாளிகள் கண்டன கூட்டத்தில் வாசிக்க முடியாமல் போன கவிதை

வீடு திரும்பட்டும் குழந்தைகள்

இலைகளாகதெருக்களில் உதிர்ந்துகிடக்கும்உடல்கள்
முகம் சிதைக்கப்பட்டபூக்களாகக் குழந்தைகள்
தன் குழந்தைமை இழந்துசீருடையுடன் பதுங்குகுழிக்குள்ஒளியும் மழலைகள்
வெடிகுண்டுகளைகர்ப்பவாயில் வெடிக்கச் செய்துகளிகொள்ளும் வெறியர்கள்
அன்றாடம்செய்தித்தாள்களில்குருதி பிசுபிசுக்கக் கிடைக்கிறதுபோரைப் பற்றிய செய்திகள்
மொழிக்குப் பிடிபடாதுஎன்னுள் நெடுநேரமாக ஓடித்திரியும் உணர்வுகள் எனநட்சத்திரங்கள் ஓடித்திரியும்வானத்தின் கீழாகத்தனதிடம் தேடித்திரியும்எம்ரத்த உறவுகள்
நாளைய வேலைகள்நாளைக்கான சேமிப்புகள்நாளைக்கான திட்டமிடல்கள்ஏதுமற்றுஇன்றைய தினம்அல்லதுஇந்த நொடி எனச் சுருங்கும்வாழ்க்கை
யதார்த்தத்தின் வழிகளில்வைக்கவியலாத நம்பிக்கைகளாகமுடியும் காலம்.
நமக்கும் ஏனையோருக்கும்இன்னும் இந்த உலகின்கடைக்கோடிகளில் இருக்கும்எந்த ஒரு மனிதனுக்கும்தெரியும்.பள்ளியிலிருந்துதிரும்பும் குழந்தைகள்வந்துசேர விரும்புவதுதம் வீடுகளுக்குத்தானே தவிரபதுங்குகுழிகளுக்கில்லை என்பது.

கவிதைகளை மேலும் வாசிக்க http://www.tamilkavithaikal.com/ எனும் எங்களுடைய கவிதை தளத்திற்கு வரவும் ....இது கவிஞர்களுக்கான இணையதளம்.கவிஞர்களுக்காக கவிஞர்களால் நடத்தப்படும் இணையதளம்.கவிதையை சுவாசிப்பவர்களும் கவிதையை நேசிப்பவர்களும் கவிதையை வாசிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் பங்கெடுக்கலாம்.

Wednesday, October 7, 2009

கனிமொழியின் சிகரங்களில் உறைகிறது காலம்

பாப்ப்லோ நெருதா :--

எனக்கு சொற்க்களை மிகவும் பிடிக்கும்.அறியப்படாத ஏதோவொரு உலகிலிருந்து அவை தோன்றுகின்றன.வெள்ளி மீன்களை போல துள்ளிக்கொண்டிருக்கக்கூடியதும், கூழாங்கர்க்களைப் போல் வடிவேரியதுமான சொற்க்களை தேடி ஓடுகிறேன்.ஒரு பழத்தைப் போல அவற்றை துடைத்து தோலுரித்து கடித்து தின்பேன்.கடினமான சொற்க்களை உருக்கிக் குடிப்பேன்.பேராசையுடன் சொற்க்களை பிடித்து என் கவிதைகளில் சேகரித்து வைப்பேன்.பிரபஞ்சம் அணுக்களால் ஆனது அல்ல.சொற்களால்தான் உருவாக்கபட்டிருக்கிறது. சிகரங்களில் உறைகிறது காலம்.- இது கனிமொழியின் மூன்றாவது கவிதை நூல். அவரது கருவறை வாசம் இன்னும் நம் நினைவுகளை விட்டுப்போகாது .

கருவறை வாசனை
அது சந்தனம் இல்லை
ஜவ்வாதோ ,இப்போது
அழகான புட்டிகளில் விற்கும்
வாசனை திரவியமோ,எதை
போலும் இல்லாத புதுமணம்.

சின்ன வயதில் அவளைக்
கட்டிக்கொண்டு தூங்கியபோது
மெல்லியதாய் வந்து மூக்கைத் தழுவும்

அவள் அவிழ்த்து போட்ட சேலையை
சுற்றிக்கொண்டு திரிந்த பொழுது
அவளின் வாசனையை
பூசிக்கொண்டதாக தோன்றும்

முதல் மழையின் மன்ன்வாடை போல்
மூச்சு முட்ட நிரப்பிவைதுக்கொள்ள
தூண்டும் அம்மாவின் வாசனை .

என கூறிக்கொண்டே வரும் கனிமொழி மேலும் அக்கவிதையை முடிக்கையில்

அவளின் கருவறை மணத்தை
அள்ளி அள்ளி என்
வீடெங்கும் தெளித்து சுருண்டு படுத்து தூங்கி போக வேண்டும் / என்கிறார்..

உலகில் மிகச்சிறந்த வாசமென்றால் அது கருவறை வாசம். தாயும் சேயும் உணரும் அந்த உன்னத வாசத்தை தனது கவிதையின் வாயிலாக ஒவ்வொருவரையும் ஏங்க வைத்து விட்டார் கனிமொழி.

கனிமொழியின் கவிதைகள் அவரது எண்ணங்களின் தொடர் வெளிப்பாடகவே தெரிகிறது. மிக இறுகிய நிலப்பரப்பையும் தனது சின்ன யத்தனிப்பில் மெல்லிய முனை கொண்டு பூமி கீறி துளிர்விடும் புல் போல மிகசுலபமாய் வருகிறது வார்த்தைகள். நவீன தமிழ் கவிதைகளில் இவரது அவதானிப்பு,மெல்லிய சாரலாகவும், பெரும் மழையாகவும்,சாட்டயடியாகவும் வெளிப்படுகின்றன.இவரது கவி மனம் எதையும் தவறவிடவில்லை.இவரது பார்வைகளில் மீனவர்கள்,பிச்சை எடுக்கும் பலர்,தங்கதாரகைகள்,புதிய சூரியன்கள்,புயல்,காட்டாறு,சிகரம்,மாவீரர்கள்,அறிவுஜீவிகள்,அறிஞர்கள்,தென்றல்,பூ,குழந்தையின் மென் ஸ்பரிசம்,பெண்ணியம்,அச்சம் ,அடக்கமென்ற அணிகலன்,பெண்களின் நிலை என அனைத்தையும் தனது கவிதைக்குள் கொண்டு வருகிறார்.

கனிமொழியிடம் சில கேள்விகள்: கருவறை வாசனை -- " கவிதை என்ற கலை வடிவத்தை நீங்கள் ஏன் தேர்ந்தேடுதீர்கள்? '' என்ற கேள்விக்கு, பதில் கூறுகிறார், "எழுத்து என்பது உண்மையாய் ,எவ்வித பூசுகளுமற்று இருப்பதாய் எனக்கு தோன்றுவதால், இதில் ஈர்க்கப்பட்டேன் " என்று.. உண்மைதான். அவர் எவ்வித பூச்சுமின்றி மிக இயல்பாக பல கவிதைகளை எழுதுதியிருப்பது உண்மை.

திருவிழா அணிந்திருந்த நகரம் ' என்று ஆரம்பிக்கும் பொழுதே அவரின் கவி மனதோடு ஒன்றி நூலை வாசிக்க முடிகிறது.

"அறிவை விட அடக்கமே அணிகலன் / அடங்கிபோனேன் " என்று எழுதும் பொழுது பல பெண்களின் உணர்வாய் படுகிறது.

" மண்ணில் திருக்கையை
அறுத்து கொண்டிருப்பவன்
எரியும் உட்பாகங்களுக்காக
அலைகின்றன காக்கைகளும் நாய்களும் /"
அதில் இருக்கும் காத்திருப்பு பல்வேறு எண்ணங்களை எனக்குள் கொண்டுவந்தன..

'' வன்புணர்வில் புழை கிழிந்து
கதறும் சிறுமியைப் போல்
இருண்மையின் இருள்
சூழ்ந்த பகல் பொழுதுகளில் "

ஒரு வலியை, வலி கலந்த உணர்வை இதை விட கணமான வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமாவென்று தெரியவில்லை... சிறுமியின் கதறல் ,இருள் சூழ்ந்த பகல், வலி,அச்சம்,ஆகிய உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இந்த சமுதாயத்தில் நமக்கு பல சமயமங்களில் பல முகங்கள் உண்டு. "புதிய முகங்கள், புதிய அகங்கள் மாட்டப்பட்டன " என்கிறார் கவிஞர்.
சமூகம் என்ற கவிதயில் ஓரிடத்தில்

" பிற்போக்குத்தனம் என்றது
ஒரு கூட்டம்.
அவசரமாய் மாற்றங்கள்
செய்து அணைந்து கொண்டேன்.
கலாசார சீரழிவு
என்றன சங்கங்கள்,
புதிதாய் ஒரு மேலிடம்
பொறுமை காக்கசொல்லி
கட்டளையிட்டது''

சமூகதிர்க்காய் பலர் ஒவொரு விடயத்திலும் விரும்பியோ விரும்பாமலோ செய்யும் மாற்றங்கள்.கவிதையில் குறித்த சொற்கள், புதுப்புது அர்த்தங்களையும்,தர்க்கங்களையும்,பின்னி புனையப்பட்ட வரிகள் கொடுக்கின்றது.

எப்போதாவது யாரையாவது
நேசிக்காமல் இருந்ததில்லை
நேசித்ததை தொடர்ந்து நேசித்ததுமில்லை,
நேசிக்க தொடங்கியவர்
ஏன் நேசிதவரகவே
இருப்பதுமில்லை,
நேசிக்காமல் வாழவும்
தெரியவில்லை.
இந்த கவிதை ஒவோருவர் மனதிலும் தினம் நடக்கும் ஒரு விந்தையான விடயம். மிக நேர்த்தியாக அவர் கூறியது போல எவித பூச்சுமின்றி வெளிப்படுத்துகிறார் கனிமொழி.



'' தனியே வந்து தனியே
உறவறுத்து போக
இடையில் ஏன் இத்தனை
நாடகம்.'' என்ற வரிகள் மெய்யிலை வாழ்வு சார்ந்த விடயங்களை அதன் போக்கில் காணும் அந்த நேர்த்தி வியக்க வைக்கிறது.

பூமியின் தகடுகள் அசைகின்றன '' என்ற வலிமையான வரிகள் கொண்ட ''சதுக்க பூதம் '' என்ற கவிதையில் ''ஆராய்ச்சி மணிகளை /உருக்கி போர் வாள்கள் செய்கிறார்கள்/ " என்று சமூகத்தின் உச்ச கட்ட கொடுமையை சொல்லும் கனிமொழி, '' தலைவர்கள் கைகுலுக்கி/ பிரிகிறார்கள் .ஒருமித்த குரலில் /கரிசனத்தை வெளிபடுத்தினோம் என்று /'' என அந்த கவிதையை முடிக்கிறார்..அவர் கூறிய வரிகளின் கணமும் ,அர்த்தமும், கண்டங்கள் அசைகின்றன என்ற வரிகளுக்கு வலு சேர்க்கின்றது, இதை விட உண்மையான விமர்சனம் உலகின் நடப்பை சொல்ல இருக்கமுடியாது.அதை படிக்கும் என் மனமும் கனத்த நினைவுகளை சுமந்து எல்லையற்ற வெளியில் சஞ்சாரிக்க துவங்கியது.

சமூக சிந்தனையுள்ள ஒரு மனுஷியாய் பல
கவிதைகளை படைத்த அவர், மகளாய் , அவரது தந்தையை பார்க்கும் பார்வை கண்டு நெகிழ்ந்து போனேன்..தகப்பனாரின் உணர்வு புரிந்த மகளாய்
அவர் இப்படி எழுதுகிறார்.

"விரிந்து நீளும்
பொன்விழா வழித்தடத்தில்
உன் புன்னகையோடு
ததும்பும் வலிகளை
யார் அறிவார்? "
"சந்ததி" என்ற கவிதை என்னை புரட்டி போட்டது.. அந்த நிஜம் அனைவர் மனதிலும் தகிக்கும். இப்படி எழுதுகிறார் கனிமொழி..

உனக்கென எதைவிட்டுப்
போகிறேன்..
நாங்கள் தலைமுறைகளாய்
சுரண்டி
சக்கையாய் துப்பிய
பூமியை!

குயில்களின் கானங்கள்
நெரிக்கப்பட்ட
மகரந்தமற்ற சோலைகளை!

தூக்கி எறியப்படும்
துண்டு மாமிசங்களுக்காக
கூண்டுக்குள் கர்ஜிக்கும்
களைத்த சிங்கங்களை !

பிடுங்கி நடப்படும்
மலட்டு காடுகளை !

அடையாளங்களின் பெயரால்
வீசப்படும் வாட்ட்களின்
நுனியில் பட்டு
சிதறிய சிறகுகளை !

வீரத்தின் கரைகளில்
சரித்திரம் வீசியுள்ள
புதைக்கப்படாத பிணங்களை !

கனவிலும் உன்னை
அச்சுறுத்த துடிக்கும்
ஏவுகணைகளை !

கானலற்று விரியும்
இந்த பாலை வனங்களில்
திக்கற்று எரிந்து அடங்கும்
சாம்பலிலிருந்து
நீயேனும் எழுவாயா?!

ஒரு பெண்ணாய் , தாயாய் ,சமூக சிந்தனையுள்ள மனுஷியாய் வரும் சந்ததியினருக்காக கவலை படுகிறார்.நிச்சயம் கனிமொழி எவ்வித பூச்சுமற்ற உண்மையான உணர்வுகளை தனது தேர்ந்து எடுத்த வார்த்தைகளால்,சிறப்பான கவிதை நூலை தந்திருக்கிறார்.

-கவிஞர் இன்பா சுப்ரமணியம்

கவிதைகளை மேலும் வாசிக்க http://www.tamilkavithaikal.com/ எனும் எங்களுடைய கவிதை தளத்திற்கு வரவும் ....
இது கவிஞர்களுக்கான இணையதளம்
.கவிஞர்களுக்காக கவிஞர்களால் நடத்தப்படும் இணையதளம்.கவிதையை சுவாசிப்பவர்களும் கவிதையை நேசிப்பவர்களும் கவிதையை வாசிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் பங்கெடுக்கலாம்.

Tuesday, October 6, 2009

ராஜா சந்திரசேகர் கவிதைகள்

இவர் கவிதையின் அடையாளம் எளிமையான அன்பும் நேர்மையான அக்கறையும்தான்.வாழ்க்கையின் ஈர்ப்பையும் நிராகரிப்பையும் சொல்கின்றன இவர் கவிதைகள்.மாறுபட்ட கோணமும் படிப்பவரை உள்ளிழுக்கும் வசீகரமும் கொண்ட இவர் எழுத்துக்கள் தீவிர தேடலும் தெளிவும் கொண்டவை.

பிரிட்ஜின் மீது ஒட்டப்பட்டிருக்கும் கவிதை

பிரிட்ஜின் மீது
ஒட்டப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை

திறந்து மூடும் நேரத்தில்
சின்ன வரிகளைப்
படித்துவிட முடிகிறது

ஒட்டப்பட்டிருக்கும் கோணத்தில்
கவிதையால் வாசிக்க முடிகிறது
முழு வீட்டையும்

பிரிட்ஜ்க்குள் இருக்கும் பழம் போல
எழுத்து கெடாமல் இருக்குமா
சிரித்தபடிக் கேட்கிறாள் பாட்டி

அந்தக் காகிதம்
குளிர்ச் சாதனப் பெட்டியின்
அழகைக் குறைக்கிறது
என்கிறாள் மருமகள்

வேலைக்காரியின் மகள்
சத்தம் போட்டு
எழுத்துக் கூட்டிப் படிக்கிறாள்

ஒரு விருந்தினர்
யார் எழுதியது எனக்கேட்டு
காப்பியைக் குடித்து முடித்து
பாராட்டிச் செல்கிறார்

இதனால்
கிழிக்கப்பட இருந்த கவிதையின்
ஆயுள் நீள்கிறது

தூக்கம் வராத அப்பா
ஒரு நள்ளிரவில்
அருகில் போய் படித்து
கையால் வருடிக் கொடுக்கிறார்

சிலிர்த்துப் போகின்றன எழுத்துக்கள்

கவிதையின் பக்கத்தில்
ஆப்பிள் ஓவியத்தை ஒட்டி வைத்து
எப்படி இருக்கிறது
கேட்கிறாள் மகள்

கைதட்டி ரசித்து
அவளைப் பாராட்டிய அப்பா
படித்துப் பார்க்கிறார்

கூடி இருக்கிறது
கவிதையின் சுவை

கவிதைகளை மேலும் வாசிக்க http://www.tamilkavithaikal.com/ எனும் எங்களுடைய கவிதை தளத்திற்கு வரவும் ...
இது கவிஞர்களுக்கான இணையதளம்
.கவிஞர்களுக்காக கவிஞர்களால் நடத்தப்படும் இணையதளம்.கவிதையை சுவாசிப்பவர்களும் கவிதையை நேசிப்பவர்களும் கவிதையை வாசிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் பங்கெடுக்கலாம்.

Monday, October 5, 2009

இது கவிஞர்களுக்கான இணையதளம்

அன்புள்ள நண்பர்களே!

வணக்கம்.

நாங்கள்
http://www.tamilkavithaikal.com/ எனும் இணைய தளம் துவங்கியிருக்கிறோம்.


இது கவிஞர்களுக்கான இணையதளம்

கவிஞர்களுக்காக கவிஞர்களால் நடத்தப்படும் இணையதளம்.

கவிதையை சுவாசிப்பவர்களும் கவிதையை நேசிப்பவர்களும் கவிதையை வாசிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் பங்கெடுக்கலாம்.

கவிஞர்களின் புதிய கவிதைகள் இங்கே வெளியிடப்படும்.

கவிதை உலகில் நடைபெறும் கூட்டங்கள், கவியரங்கங்கள், புத்தக வெளியீடுகள் இவைகளைப் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.

அன்றாடம் வெளியாகிக் கொண்டிருக்கும் கவிதைத் தொகுதிகளை நூல் அறிமுகம் செய்து வைக்கும் பணி இங்கே நடைபெறும்.

புதிய கவிதைத் தொகுதிகளுக்கான விமர்சனம் இடம் பெறும்.

கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள், கவிஞர்களின் நேர்காணல்கள், கவிஞர்களுக்கிடையேயான விவாதங்கள் இடம்பெறும்.

இந்த இணையதளத்தின் சிறப்புப் பகுதியாக கீழ்கண்ட பகுதிகள் இடம்பெறும்.

1.முகவரிக் கவிதைகள் 2. பொக்கிஷக் கடிதங்கள் 3.என் கவிதைகள் 4. எனக்குப் பிடித்த கவிதைகள்

முகவரிக் கவிதைகள் ; ஒரு கவிஞர் சில நூறு கவிதைகள் எழுதியிருக்கின்ற போதும் அவற்றில் சில கவிதைகள் அவர் வாழ்கையில் மிக முக்கியமான கவிதைகளாகிவிடுகின்றன. அதில் ஏதோ ஒரு கவிதையே அவருடைய முதல் கவிதையாக இருக்கிறது. ஏதோ ஒரு கவிதை கல்லூரி அல்லது பள்ளி அளவில் பரிசினை வாங்கிக் கொடுக்கிறது. ஒரு கவிதை மிகவும் பிரபலமாக்கி விடுகிறது. ஒரு கவிதை காதலியைத் தேடித்தருகிறது. ஒரு கவிதை உலகமே அந்தக் கவிதையை ரசிக்கா விட்டாலும் தனக்கு மிகவும் பிடித்தக் கவிதையாக இருக்கிறது. தமிழின் முக்கியக் கவிஞர்கள் தனக்கு அவ்விதம் முகவரி தேடித் தந்த கவிதைகளைப் பற்றி இங்கே பேசுகிறார்கள்.

பொக்கிஷக் கடிதங்கள் ; ஒவ்வொரு கவிஞரிடமும் அவருடைய கவிதைத் தொகுப்பைப் பற்றி அல்லது ஒரு கவிதையைப் பற்றி இன்னொரு பிரபல கவிஞர் எழுதிய ஒரு கடிதம் பொக்கிஷமாகப் பாதுகாக்கப் பட்டு இருக்கிறது. அந்தக் கடிதங்களின் தொடர் இந்தப் பகுதியில் இடம்பெற இருக்கிறது.

என் கவிதைகள்

ஒரு கவிஞர் அவர் எழுதிய கவிதைகளில் அவருக்கு மிகவும் பிடித்தமானது என உணரும் கவிதைகளை அவரே தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் பகுதி இது. இந்தப் பகுதியை வாசிக்கும் ஒருவர் அந்தக் கவிஞரைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தக் கவிஞரின் மற்ற கவிதைகளைத் தேடிப் படிக்கும் ஆர்வத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

எனக்குப் பிடித்த கவிதைகள்

இந்தப் பகுதியில் ஒரு கவிஞர் அவருடைய நீண்ட வாசிப்பில் அவ்வப்போது அவருடைய மனம் கவர்ந்த கவிதைகளை பதிவு செய்யலாம். ஒரே முறையில் எல்லாக் கவிதைகளையும் என்றில்லாமல் ஒவ்வொரு முறையும் சில கவிதைகள் என தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம்.

இது போல் இன்னும் பல இனிய பகுதிகள் இந்த இணையதளத்தில் உருவாக இருக்கிறது.

இந்த இணையதளத்திற்கு தங்களுடைய மகத்தான ஆதரவை தரும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி

அன்புடன்,
ஆசிரியர் குழு.
தமிழ்கவிதைகள்.காம்