Tuesday, October 6, 2009

ராஜா சந்திரசேகர் கவிதைகள்

இவர் கவிதையின் அடையாளம் எளிமையான அன்பும் நேர்மையான அக்கறையும்தான்.வாழ்க்கையின் ஈர்ப்பையும் நிராகரிப்பையும் சொல்கின்றன இவர் கவிதைகள்.மாறுபட்ட கோணமும் படிப்பவரை உள்ளிழுக்கும் வசீகரமும் கொண்ட இவர் எழுத்துக்கள் தீவிர தேடலும் தெளிவும் கொண்டவை.

பிரிட்ஜின் மீது ஒட்டப்பட்டிருக்கும் கவிதை

பிரிட்ஜின் மீது
ஒட்டப்பட்டிருக்கிறது
ஒரு கவிதை

திறந்து மூடும் நேரத்தில்
சின்ன வரிகளைப்
படித்துவிட முடிகிறது

ஒட்டப்பட்டிருக்கும் கோணத்தில்
கவிதையால் வாசிக்க முடிகிறது
முழு வீட்டையும்

பிரிட்ஜ்க்குள் இருக்கும் பழம் போல
எழுத்து கெடாமல் இருக்குமா
சிரித்தபடிக் கேட்கிறாள் பாட்டி

அந்தக் காகிதம்
குளிர்ச் சாதனப் பெட்டியின்
அழகைக் குறைக்கிறது
என்கிறாள் மருமகள்

வேலைக்காரியின் மகள்
சத்தம் போட்டு
எழுத்துக் கூட்டிப் படிக்கிறாள்

ஒரு விருந்தினர்
யார் எழுதியது எனக்கேட்டு
காப்பியைக் குடித்து முடித்து
பாராட்டிச் செல்கிறார்

இதனால்
கிழிக்கப்பட இருந்த கவிதையின்
ஆயுள் நீள்கிறது

தூக்கம் வராத அப்பா
ஒரு நள்ளிரவில்
அருகில் போய் படித்து
கையால் வருடிக் கொடுக்கிறார்

சிலிர்த்துப் போகின்றன எழுத்துக்கள்

கவிதையின் பக்கத்தில்
ஆப்பிள் ஓவியத்தை ஒட்டி வைத்து
எப்படி இருக்கிறது
கேட்கிறாள் மகள்

கைதட்டி ரசித்து
அவளைப் பாராட்டிய அப்பா
படித்துப் பார்க்கிறார்

கூடி இருக்கிறது
கவிதையின் சுவை

கவிதைகளை மேலும் வாசிக்க http://www.tamilkavithaikal.com/ எனும் எங்களுடைய கவிதை தளத்திற்கு வரவும் ...
இது கவிஞர்களுக்கான இணையதளம்
.கவிஞர்களுக்காக கவிஞர்களால் நடத்தப்படும் இணையதளம்.கவிதையை சுவாசிப்பவர்களும் கவிதையை நேசிப்பவர்களும் கவிதையை வாசிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் பங்கெடுக்கலாம்.

1 comment:

thamizhparavai said...

nice post...
raja chandrasekar's world is entirely different..it is filled with loved and beauty...
im big fan of his poems...]
(im in office..so no tamil font)

Post a Comment