Wednesday, October 7, 2009

கனிமொழியின் சிகரங்களில் உறைகிறது காலம்

பாப்ப்லோ நெருதா :--

எனக்கு சொற்க்களை மிகவும் பிடிக்கும்.அறியப்படாத ஏதோவொரு உலகிலிருந்து அவை தோன்றுகின்றன.வெள்ளி மீன்களை போல துள்ளிக்கொண்டிருக்கக்கூடியதும், கூழாங்கர்க்களைப் போல் வடிவேரியதுமான சொற்க்களை தேடி ஓடுகிறேன்.ஒரு பழத்தைப் போல அவற்றை துடைத்து தோலுரித்து கடித்து தின்பேன்.கடினமான சொற்க்களை உருக்கிக் குடிப்பேன்.பேராசையுடன் சொற்க்களை பிடித்து என் கவிதைகளில் சேகரித்து வைப்பேன்.பிரபஞ்சம் அணுக்களால் ஆனது அல்ல.சொற்களால்தான் உருவாக்கபட்டிருக்கிறது. சிகரங்களில் உறைகிறது காலம்.- இது கனிமொழியின் மூன்றாவது கவிதை நூல். அவரது கருவறை வாசம் இன்னும் நம் நினைவுகளை விட்டுப்போகாது .

கருவறை வாசனை
அது சந்தனம் இல்லை
ஜவ்வாதோ ,இப்போது
அழகான புட்டிகளில் விற்கும்
வாசனை திரவியமோ,எதை
போலும் இல்லாத புதுமணம்.

சின்ன வயதில் அவளைக்
கட்டிக்கொண்டு தூங்கியபோது
மெல்லியதாய் வந்து மூக்கைத் தழுவும்

அவள் அவிழ்த்து போட்ட சேலையை
சுற்றிக்கொண்டு திரிந்த பொழுது
அவளின் வாசனையை
பூசிக்கொண்டதாக தோன்றும்

முதல் மழையின் மன்ன்வாடை போல்
மூச்சு முட்ட நிரப்பிவைதுக்கொள்ள
தூண்டும் அம்மாவின் வாசனை .

என கூறிக்கொண்டே வரும் கனிமொழி மேலும் அக்கவிதையை முடிக்கையில்

அவளின் கருவறை மணத்தை
அள்ளி அள்ளி என்
வீடெங்கும் தெளித்து சுருண்டு படுத்து தூங்கி போக வேண்டும் / என்கிறார்..

உலகில் மிகச்சிறந்த வாசமென்றால் அது கருவறை வாசம். தாயும் சேயும் உணரும் அந்த உன்னத வாசத்தை தனது கவிதையின் வாயிலாக ஒவ்வொருவரையும் ஏங்க வைத்து விட்டார் கனிமொழி.

கனிமொழியின் கவிதைகள் அவரது எண்ணங்களின் தொடர் வெளிப்பாடகவே தெரிகிறது. மிக இறுகிய நிலப்பரப்பையும் தனது சின்ன யத்தனிப்பில் மெல்லிய முனை கொண்டு பூமி கீறி துளிர்விடும் புல் போல மிகசுலபமாய் வருகிறது வார்த்தைகள். நவீன தமிழ் கவிதைகளில் இவரது அவதானிப்பு,மெல்லிய சாரலாகவும், பெரும் மழையாகவும்,சாட்டயடியாகவும் வெளிப்படுகின்றன.இவரது கவி மனம் எதையும் தவறவிடவில்லை.இவரது பார்வைகளில் மீனவர்கள்,பிச்சை எடுக்கும் பலர்,தங்கதாரகைகள்,புதிய சூரியன்கள்,புயல்,காட்டாறு,சிகரம்,மாவீரர்கள்,அறிவுஜீவிகள்,அறிஞர்கள்,தென்றல்,பூ,குழந்தையின் மென் ஸ்பரிசம்,பெண்ணியம்,அச்சம் ,அடக்கமென்ற அணிகலன்,பெண்களின் நிலை என அனைத்தையும் தனது கவிதைக்குள் கொண்டு வருகிறார்.

கனிமொழியிடம் சில கேள்விகள்: கருவறை வாசனை -- " கவிதை என்ற கலை வடிவத்தை நீங்கள் ஏன் தேர்ந்தேடுதீர்கள்? '' என்ற கேள்விக்கு, பதில் கூறுகிறார், "எழுத்து என்பது உண்மையாய் ,எவ்வித பூசுகளுமற்று இருப்பதாய் எனக்கு தோன்றுவதால், இதில் ஈர்க்கப்பட்டேன் " என்று.. உண்மைதான். அவர் எவ்வித பூச்சுமின்றி மிக இயல்பாக பல கவிதைகளை எழுதுதியிருப்பது உண்மை.

திருவிழா அணிந்திருந்த நகரம் ' என்று ஆரம்பிக்கும் பொழுதே அவரின் கவி மனதோடு ஒன்றி நூலை வாசிக்க முடிகிறது.

"அறிவை விட அடக்கமே அணிகலன் / அடங்கிபோனேன் " என்று எழுதும் பொழுது பல பெண்களின் உணர்வாய் படுகிறது.

" மண்ணில் திருக்கையை
அறுத்து கொண்டிருப்பவன்
எரியும் உட்பாகங்களுக்காக
அலைகின்றன காக்கைகளும் நாய்களும் /"
அதில் இருக்கும் காத்திருப்பு பல்வேறு எண்ணங்களை எனக்குள் கொண்டுவந்தன..

'' வன்புணர்வில் புழை கிழிந்து
கதறும் சிறுமியைப் போல்
இருண்மையின் இருள்
சூழ்ந்த பகல் பொழுதுகளில் "

ஒரு வலியை, வலி கலந்த உணர்வை இதை விட கணமான வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமாவென்று தெரியவில்லை... சிறுமியின் கதறல் ,இருள் சூழ்ந்த பகல், வலி,அச்சம்,ஆகிய உணர்வுகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இந்த சமுதாயத்தில் நமக்கு பல சமயமங்களில் பல முகங்கள் உண்டு. "புதிய முகங்கள், புதிய அகங்கள் மாட்டப்பட்டன " என்கிறார் கவிஞர்.
சமூகம் என்ற கவிதயில் ஓரிடத்தில்

" பிற்போக்குத்தனம் என்றது
ஒரு கூட்டம்.
அவசரமாய் மாற்றங்கள்
செய்து அணைந்து கொண்டேன்.
கலாசார சீரழிவு
என்றன சங்கங்கள்,
புதிதாய் ஒரு மேலிடம்
பொறுமை காக்கசொல்லி
கட்டளையிட்டது''

சமூகதிர்க்காய் பலர் ஒவொரு விடயத்திலும் விரும்பியோ விரும்பாமலோ செய்யும் மாற்றங்கள்.கவிதையில் குறித்த சொற்கள், புதுப்புது அர்த்தங்களையும்,தர்க்கங்களையும்,பின்னி புனையப்பட்ட வரிகள் கொடுக்கின்றது.

எப்போதாவது யாரையாவது
நேசிக்காமல் இருந்ததில்லை
நேசித்ததை தொடர்ந்து நேசித்ததுமில்லை,
நேசிக்க தொடங்கியவர்
ஏன் நேசிதவரகவே
இருப்பதுமில்லை,
நேசிக்காமல் வாழவும்
தெரியவில்லை.
இந்த கவிதை ஒவோருவர் மனதிலும் தினம் நடக்கும் ஒரு விந்தையான விடயம். மிக நேர்த்தியாக அவர் கூறியது போல எவித பூச்சுமின்றி வெளிப்படுத்துகிறார் கனிமொழி.



'' தனியே வந்து தனியே
உறவறுத்து போக
இடையில் ஏன் இத்தனை
நாடகம்.'' என்ற வரிகள் மெய்யிலை வாழ்வு சார்ந்த விடயங்களை அதன் போக்கில் காணும் அந்த நேர்த்தி வியக்க வைக்கிறது.

பூமியின் தகடுகள் அசைகின்றன '' என்ற வலிமையான வரிகள் கொண்ட ''சதுக்க பூதம் '' என்ற கவிதையில் ''ஆராய்ச்சி மணிகளை /உருக்கி போர் வாள்கள் செய்கிறார்கள்/ " என்று சமூகத்தின் உச்ச கட்ட கொடுமையை சொல்லும் கனிமொழி, '' தலைவர்கள் கைகுலுக்கி/ பிரிகிறார்கள் .ஒருமித்த குரலில் /கரிசனத்தை வெளிபடுத்தினோம் என்று /'' என அந்த கவிதையை முடிக்கிறார்..அவர் கூறிய வரிகளின் கணமும் ,அர்த்தமும், கண்டங்கள் அசைகின்றன என்ற வரிகளுக்கு வலு சேர்க்கின்றது, இதை விட உண்மையான விமர்சனம் உலகின் நடப்பை சொல்ல இருக்கமுடியாது.அதை படிக்கும் என் மனமும் கனத்த நினைவுகளை சுமந்து எல்லையற்ற வெளியில் சஞ்சாரிக்க துவங்கியது.

சமூக சிந்தனையுள்ள ஒரு மனுஷியாய் பல
கவிதைகளை படைத்த அவர், மகளாய் , அவரது தந்தையை பார்க்கும் பார்வை கண்டு நெகிழ்ந்து போனேன்..தகப்பனாரின் உணர்வு புரிந்த மகளாய்
அவர் இப்படி எழுதுகிறார்.

"விரிந்து நீளும்
பொன்விழா வழித்தடத்தில்
உன் புன்னகையோடு
ததும்பும் வலிகளை
யார் அறிவார்? "
"சந்ததி" என்ற கவிதை என்னை புரட்டி போட்டது.. அந்த நிஜம் அனைவர் மனதிலும் தகிக்கும். இப்படி எழுதுகிறார் கனிமொழி..

உனக்கென எதைவிட்டுப்
போகிறேன்..
நாங்கள் தலைமுறைகளாய்
சுரண்டி
சக்கையாய் துப்பிய
பூமியை!

குயில்களின் கானங்கள்
நெரிக்கப்பட்ட
மகரந்தமற்ற சோலைகளை!

தூக்கி எறியப்படும்
துண்டு மாமிசங்களுக்காக
கூண்டுக்குள் கர்ஜிக்கும்
களைத்த சிங்கங்களை !

பிடுங்கி நடப்படும்
மலட்டு காடுகளை !

அடையாளங்களின் பெயரால்
வீசப்படும் வாட்ட்களின்
நுனியில் பட்டு
சிதறிய சிறகுகளை !

வீரத்தின் கரைகளில்
சரித்திரம் வீசியுள்ள
புதைக்கப்படாத பிணங்களை !

கனவிலும் உன்னை
அச்சுறுத்த துடிக்கும்
ஏவுகணைகளை !

கானலற்று விரியும்
இந்த பாலை வனங்களில்
திக்கற்று எரிந்து அடங்கும்
சாம்பலிலிருந்து
நீயேனும் எழுவாயா?!

ஒரு பெண்ணாய் , தாயாய் ,சமூக சிந்தனையுள்ள மனுஷியாய் வரும் சந்ததியினருக்காக கவலை படுகிறார்.நிச்சயம் கனிமொழி எவ்வித பூச்சுமற்ற உண்மையான உணர்வுகளை தனது தேர்ந்து எடுத்த வார்த்தைகளால்,சிறப்பான கவிதை நூலை தந்திருக்கிறார்.

-கவிஞர் இன்பா சுப்ரமணியம்

கவிதைகளை மேலும் வாசிக்க http://www.tamilkavithaikal.com/ எனும் எங்களுடைய கவிதை தளத்திற்கு வரவும் ....
இது கவிஞர்களுக்கான இணையதளம்
.கவிஞர்களுக்காக கவிஞர்களால் நடத்தப்படும் இணையதளம்.கவிதையை சுவாசிப்பவர்களும் கவிதையை நேசிப்பவர்களும் கவிதையை வாசிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் பங்கெடுக்கலாம்.

No comments:

Post a Comment