Saturday, October 24, 2009

கவிஞர் சல்மாவின் நேர்காணல்

இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறீர்கள்.மறுபடியும் ஒரு புதிய கவிதையை எழுதும் உத்வேகத்தை எது தருகிறது. இதில் கிடைக்கிற பணமா? புகழா? அந்தஸ்த்தா?

(சிரிக்கிறார்) கவிதை எழுதுகிறவர்களுக்கு பெரிதாக யாரும் பணம் தருவதில்லை. கவிதைக்கென்று அவர்கள் தரும் பணம் கவிதை எழுதும் எண்ணத்தை அல்ல, எந்த எண்ணத்தையுமே உண்டாக்காது. புகழுக்காகவும் அந்தஸ்த்துக்காகவும் நான் எழுதுவதில்லை..சில விஷயங்களின் மேல் எனக்கு கோபம் இருக்கிறது, சில விஷபயங்களின் மேல் வருத்தம் இருக்கிறது. எனக்கென்று சில தோல்விகளும் ஆற்றாமைகளும் இருக்கின்றன. இவற்றை கவிதையாக எழுதா விட்டால் நான் நிம்மதி இழக்கிறேன். இந்த நிம்மதி இன்மையே என்னை கவிதை எழுத வைக்கிறது.


உங்கள் கவிதைகளில் வீட்டைப் பற்றிய கசப்பான எண்ணங்கள் நிறைய பதிவு செய்யப் படுகின்றன. பயணத்தில் இருந்து வீட்டிற்கு உங்களை கொண்டு வந்து சேர்க்கும் சக்தியை துர்தேவதைகள் என வர்ணிக்கிறீர்கள். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் வீடு கசப்பானதாக இருக்கிறதா? இல்லை பொதுவாகவே பெண்களுக்கு வீடு கசப்பானதாக இருக்கிறதா?

நான் எனக்கான உணர்வுகளை மட்டும் எழுதுவதில்லை. எனக்கான உணர்வு சக பெண்களுக்குமான உணர்வாக இருக்கும் போது மட்டுமே அதை பதிவு செய்கிறேன். வீடு என்று நான் சொல்வது குடும்பத்தை. குடும்பம் பெண்களுக்கு ஒரு தண்டனைக் கூடம்தான். குடும்பம் ஒரு பெண்ணை சிதைக்கவே செய்கிறது. குடும்பத்தில் ஒரு பெண் இழப்பதே அதிகம்.குடும்ப அமைப்பில் லாபம் அடையும் ஆண்களே அதை அதிகம் சிலாகிப்பார்கள். பெண் சிலாகிக்க எதுவுமில்லை.பெண் குடும்பத்தில் தன் சுதந்திரத்தை சுயத்தை இழக்கிறாள் என்பதே உண்மை.

நீங்கள் முற்போக்கான பெண்ணாக அறியப்பட்டவர். ஆனால் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் குரானின் மேன்மைகளைப் பற்றி பேசுகிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?

நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பெண். நான் என் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் என சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. என் சமூக மக்கள் தலித் மக்களைக் காட்டிலும் பல விஷயங்களில் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். துரதிர்ஷ்ட வசமாக அவர்கள் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். அரசாங்கம் சொன்னால் கேட்க மாட்டார்கள். படித்தவர்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள். பெரியவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள். ஆனால் குரான் சொல்கிறது என்று சொன்னால் உடனடியாகக் கேட்பார்கள். அந்த மக்கள் மேம்பட வேண்டியிருக்கிறது.அதற்காகவே அந்த நிகழ்ச்சி . அதற்கு வேறெதுவும் காரணம் கிடையாது.

" ஈழ மக்களுக்கு இலக்கியவாதிகள் ஒன்றுமே செய்ய வில்லை " என்கிறாரே தமிழ்நதி?

என்னை அப்படி சொல்ல முடியாது. ஈழத்தமிழருக்கான போராட்டத்திற்காக என்னை நோக்கி என்ன வெல்லாம் கேட்கப்பட்டதோ அதை எல்லாம் நான் கொடுத்திருக்கிறேன். நிதி கொடுத்திருக்கிறேன். என் படைப்புகளை கொடுத்திருக்கிறேன். என் பங்களிப்பை கொடுத்திருக்கிறேன். ஈழப்போராட்டத்திற்காக நான் சார்ந்திருக்கிற கட்சி என்னென்ன இயக்கங்களை மேற்கொண்டதே அத்தனையிலும் பங்கெடுத்திருக்கிறேன்.

ஈழப்போராட்டத்தின் மீதான எனது அன்பும் பங்கெடுப்பும் இன்று நேற்றானது அல்ல. நான் பதினைந்து வயது பெண்ணாக இருக்கும் போதிலிருந்தே அது தொடங்கி விட்டது. அந்த சமயத்தில் தான் குட்டிமணியையும் ஜெகனையும் சிங்கள அரசு கொலை செய்திருந்தது. அவர்களின் கண்ணைத் தோண்டி அவர்களின் இன்னொரு கண் முன்னேயே பூட்ஸ் காலால் நசுக்கியிருந்தது. அந்த செய்தியை ராணி பத்திரிக்கையில் படித்தேன். அன்றைய நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தேன். அப்பொழுதே அவர்களுக்காக பணம் கொடுத்திருக்கேன். நான் சேர்த்து வைத்திருந்த முந்நூறு ரூபாய் ஐநூறு ரூபாய் பணத்தையெல்லாம் அவர்களின் போராட்டத்திற்கு மணியார்டர் செய்திருக்கிறேன்.

இந்த மே 17க்கு முன்பாக படைப்பாளிகளின் சார்பாக ஒரு கண்டணக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தேன். அங்கு வாசிக்க ஒரு கவிதையும் எழுதி வைத்திருந்தேன்.கடைசி நேரத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதை ஏற்பாடு செய்திருந்த தோழியிடம் அந்தக் கவிதையை அனுப்பி வைக்கிறேன், அந்தக் கூட்டத்தில் வாசியுங்கள் என்று கேட்டேன். அவர் அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று மறுத்து விட்டார். அதனாலேயே என் பதிவு அங்கு இல்லாமல் போய் விட்டது. அதை உங்களிடம் தருகிறேன் ..வாய்ப்பிருந்தால் அதை உங்கள் தளத்தில் பிரசுரியுங்கள்.

இங்கே நம்மவர்களிடம் இருக்கிற பிரச்சினை இதுதான்.
இவர்கள் ஏதாவது ஒரு பெயரில் ஒரு அமைப்பைத் துவங்குகிறார்கள்.அதனடிப்படையில் ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். நீ உள்ளே வரலாம் நீ வரக்கூடாது என்று சட்டம் போடத்துவங்குகிறார்கள்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் UK சென்றிருந்தேன். அங்கே பல கண்டன கூட்டங்களும் போராட்டங்களும் ஈழத்தமிழர்களுக்காக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இரண்டு மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் அமர்ந்திருந்தார்கள். நானும் அவர்களுடன் இரண்டு நாட்கள் அமர்ந்திருந்தேன்.

இப்போது என்ன பேசி என்ன செய்ய? எதுவுமே செய்ய முடியாமல் நின்று விட்டோம். சில லட்சம் தமிழர்களை சாகக் கொடுத்து விட்டோம்.

அங்கு நடந்த கோரப் படுகொலைக் காட்சிகளை என்னால் பார்க்க முடிவதில்லை. அதனாலேயே அவைகள் இடம் பெற்றிருக்கும் இணைய தளங்களை கூட நான் பார்ப்பதில்லை. சமீபத்தில் ஒரு நண்பர் மிகவும் சொல்லி புகழி இணையதளத்தை ஒரு விஷயத்திற்காக பார்த்தேன். அதில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இறந்து கிடந்த படம் இருந்தது. வாய் விட்டு அழுதேன்.(இதை சொல்லும் போது அழுது விடுகிறார்)

அந்தக் குழந்தையை தலையில் அடித்து கொன்றிருக்கிறார்கள். இறந்த உடலின் மீது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள்.

யாருடையக் குழந்தையும் தெய்வமே. எல்லாக் குழந்தைகளும் கொண்டாடப் பட வேண்டியவர்களே.

குழந்தைகளைக் கூட உயிரோடு விட்டு வைக்க முடியாத படி இனவெறியோடு சிங்கள அரசு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் சர்வதேசம் ‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லை பயன்படுத்தி ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்தச் சொல்லி ஒரு கொட்டும் மழையில் மனிதச் சங்கிலியாகக் கை கோர்த்து நின்ற தினம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.அது ஒரு மாபெரும் எழுச்சியாக மாறி அந்த மக்களைக் காப்பாற்றி விடும் என்று தீவிரமாக நம்பினேன்.

ஈழத்தில் நடந்தவைகள் தீராத வலியாகவே இன்னும் நெஞ்சில் இருக்கிறது.

நம் சமூகத்தில் கவிஞர்களுக்கு இருக்கும் இடமும் அந்தஸ்த்தும் உங்களுக்கு திருப்தியானது தானா?

தனிப்பட்ட முறையில் எழுத்தின் மூலம் எனக்கு நல்ல அந்தஸ்த்தே உண்டாகி இருக்கிறது. எனக்கு நடந்த பல நல்ல விஷயங்களுக்கு காரணமாக என் எழுத்து இருப்பதை நான் உணர்கிறேன். ஆனால் ஒட்டு மொத்தமாக கவிஞர்களுக்கு இது நல்ல அந்தஸ்த்தைக் கொடுத்திருக்கிறது என்று சொல்ல மாட்டேன். நாம் கவிஞர்களையும் கவிதைகளையும் கொண்டாடாத ஒரு சமூகமே.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி உங்கள் கருத்து?

தற்சமயம் அவரைப் பற்றி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல கருத்துக்கள் சொல்லப் பட்டு வருகின்றன. ஆனால் நாம் யாருக்கும் எதுவும் தெரியாது என்பதே உண்மை. சார்பான அல்லது எதிரான ஒரு புத்தகத்தைப் படித்திருக்கிறோம் அல்லது படிக்காமல் கருத்து சொல்கிறோம் . பிரபாகரனைப் பற்றி ஈழத்தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியமானது.

உங்கள் பிள்ளைகள் ஒரு கவிதை எழுதும் அம்மாவை எப்படிப் பார்க்கிறார்கள்?

அவர்களுக்கு என் எழுத்து பற்றியெல்லாம் பெரிதாகத் தெரியாது. நான் பிரபலமாக இருப்பது அவர்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவர்களுடைய நண்பர்கள் ,வகுப்புத் தோழர்கள் அவர்களிடம் உங்கள் அம்மாவை டிவியில் பார்த்தேன் , உங்கள் அம்மாவின் புகைப்படத்தை பத்திரிக்கையில் பார்த்தேன் என்று சொல்வது அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது.

கவிஞர் சல்மா எழுதி படைப்பாளிகள் கண்டன கூட்டத்தில் வாசிக்க முடியாமல் போன கவிதை

வீடு திரும்பட்டும் குழந்தைகள்

இலைகளாகதெருக்களில் உதிர்ந்துகிடக்கும்உடல்கள்
முகம் சிதைக்கப்பட்டபூக்களாகக் குழந்தைகள்
தன் குழந்தைமை இழந்துசீருடையுடன் பதுங்குகுழிக்குள்ஒளியும் மழலைகள்
வெடிகுண்டுகளைகர்ப்பவாயில் வெடிக்கச் செய்துகளிகொள்ளும் வெறியர்கள்
அன்றாடம்செய்தித்தாள்களில்குருதி பிசுபிசுக்கக் கிடைக்கிறதுபோரைப் பற்றிய செய்திகள்
மொழிக்குப் பிடிபடாதுஎன்னுள் நெடுநேரமாக ஓடித்திரியும் உணர்வுகள் எனநட்சத்திரங்கள் ஓடித்திரியும்வானத்தின் கீழாகத்தனதிடம் தேடித்திரியும்எம்ரத்த உறவுகள்
நாளைய வேலைகள்நாளைக்கான சேமிப்புகள்நாளைக்கான திட்டமிடல்கள்ஏதுமற்றுஇன்றைய தினம்அல்லதுஇந்த நொடி எனச் சுருங்கும்வாழ்க்கை
யதார்த்தத்தின் வழிகளில்வைக்கவியலாத நம்பிக்கைகளாகமுடியும் காலம்.
நமக்கும் ஏனையோருக்கும்இன்னும் இந்த உலகின்கடைக்கோடிகளில் இருக்கும்எந்த ஒரு மனிதனுக்கும்தெரியும்.பள்ளியிலிருந்துதிரும்பும் குழந்தைகள்வந்துசேர விரும்புவதுதம் வீடுகளுக்குத்தானே தவிரபதுங்குகுழிகளுக்கில்லை என்பது.

கவிதைகளை மேலும் வாசிக்க http://www.tamilkavithaikal.com/ எனும் எங்களுடைய கவிதை தளத்திற்கு வரவும் ....இது கவிஞர்களுக்கான இணையதளம்.கவிஞர்களுக்காக கவிஞர்களால் நடத்தப்படும் இணையதளம்.கவிதையை சுவாசிப்பவர்களும் கவிதையை நேசிப்பவர்களும் கவிதையை வாசிப்பவர்களும் இந்த இணைய தளத்தில் பங்கெடுக்கலாம்.

3 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

நாம் கவிஞர்களையும் கவிதைகளையும் கொண்டாடாத ஒரு சமூகமே. //
உண்மை தான்

அகநாழிகை said...

நேர்காணல் நன்றாக இருக்கிறது. மேலோட்டமாக இல்லாமல் இன்னும் ஆழ்ந்து இருந்திருக்கலாம்.
நேர்காணல் யாரால் செய்யப்பட்டது என்ற விவரம் இல்லை.

- பொன்.வாசுதேவன்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment